குவைத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி ஐந்து தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்துள்ளன. எனினும், உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு குவைத்தில் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று பாரிய தீவிபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தில் 43 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.