கொழும்பு, வாழைத்தோட்டம் , டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குண நேற்று (09.10) உத்தரவிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, வாழைத்தோட்டம் , டெக்னிக்கல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.








