கேரளாவில் நிபா வைரஸ் சந்தேகம்: மூன்று மாவட்டங்களில் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை!

0
3

இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கேரள சுகாதார அமைச்சகத்தினால் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் வழக்கமான உடல் சோதனைகளின் போது இந்த சந்தேகிக்கத்தக்க நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடையாளம் காணப்பட்ட நபர்கள் இருவரும் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ள நிலையில், அவர்களின் பரிசோதணை மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டமொன்றில். “நெறிமுறைகளின்படி நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,” என அவர் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 3 மாவட்டங்களிலும் 26 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும். இக்குழுக்கள் அறிகுறிகள் கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுகின்றன எனவும் அவர்  குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறையின் உதவியுடன் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்படும் நிலையில், இது தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாவட்ட ஆட்சியர்களுக்கு கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கும் பணிக்கான உத்தரவும் கேரள அரசினால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here