Tamil News Channel

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எச்சங்கள் , இலக்கத் தகடு, துப்பாக்கிச்சின்னங்கள் மீட்பு..!

IMG-20240712-WA0189

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 8ஆவது நாளான நேற்று(12) இரண்டு  மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் இலக்கத்  தகடு ஒன்றும் துப்பாக்கி சின்னங்களும் மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது மேலும் ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து (11.07.24) மூன்று மனித எச்சங்களும் நேற்று(12) இரண்டு மனித எச்சங்களும்  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், எட்டாம்  நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் (12.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, மற்றும் சட்ட வைத்திய அதிகாரி  செல்லையா பிரணவன் தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த எட்டாம்  நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

நான்காவது  நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அவர்கள் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த மற்றும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன் உள்ளிட்டவர்களும் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்து கண்காணிப்பில் ஈடுபட்டதோடு கொக்குத்தொடுவாய் மக்களிடம் OMPஅலுவலக அதிகாரிகள்  புதைகுழி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தரவுகளை சேமிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மத்தியூ ஹின்ஸன் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்காணித்தார்.

இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட நாளிலிருந்து  இதுவரை மொத்தமாக 45 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ எட்டாம்  நாள் அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இன்று இரண்டு  எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து சில பாகங்கள் பிரித்து  எடுக்கப்பட்டு DNA பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து த.வி.பு -30 என தொடங்கும் தெளிவற்ற நிலையில் காணப்படும் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருடையது என சந்தேகிக்கப்படும்  இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கி சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் ஊடகவியலாளர்களால் DNA பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் மாதிரிகள் புதைகுழி அகழ்வின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களிலும் சேகரிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா

“முதலாம் கட்டம் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இயந்திரம் மூலம் அகழ்வுப்பணி நடைபெற்று ஏற்கனவே சில எலும்புகூடு தொகுதிகள் சூழலுக்கு வெளிக்காட்டப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக DNA ஆனது துல்லியமாக இருக்காது என்ற காரணமாக அவ்வாறு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை ஆனால் நாம் எலும்புகளை பகுத்தாய்வு செய்யும் போது அதிலிருந்து மாதிரிகள் எடுப்போம்

தற்போது DNA மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன இது சம்மந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவை தங்களது உறவினர்கள்தான் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடும் பொழுது அவர்களின் இரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த DNA மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தெரிவித்தார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts