பிராபகரன் மாத்திரமே இந்த முறை போட்டியிடவில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப்பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இதனையடுத்து, பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் இனவாத கருத்துக்களை வெளியிடுவதாக சமூக வலைத்தளங்களில் சுஜீவ சேனசிங்க மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர் உரையாற்றிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
எது எப்படியோ ஐக்கிய மக்கள் சக்தியினுடைய வெற்றியை தீர்மானிக்கின்ற மிக முக்கிய வாக்குகளாக சிறுபான்மையின வாக்குகள் இருக்கின்ற நிலையில் சுஜீவ சேனசிங்கவின் பேச்சு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறித்த உரையில், ”பிராபகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணில் அழைத்திருப்பார். நல்ல வேளை அவர் இப்போது உயிரோடு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுஜீவ சேனசிங்கவின் இந்த உரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியில் இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசியல் வாதிகள், ஆதரவாளர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்தப்போகிறார்கள் என்பதும் தமிழ் உணர்வாளர்கள் எவ்வாறு ஏற்றுகொள்ளப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே?.