இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
கடந்த புதன் கிழமை தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி முதலில் துடுபெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
மொஹம்மெட் சிராஜ் அதிரடியாக பந்தவீசி 15 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 153 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, நன்றே பர்கர் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.
இந்திய அணி 98 முன்னிலையில் உள்ள போது இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.
அதில் 176 ஓட்டங்களை பெற்று தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை இந்திய அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
துடுப்பாட்டத்தில் ஐடென் மார்க்ரம் 106 ஓட்டங்களை அதிகபட்சமாக தனது அணிக்காகப் பெற்றிருந்தார்.
இந்திய அணி சார்பாக ஜஸ்ப்ரிட் பும்ரா 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 3 விக்கட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
ஏற்கனவே முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக போட்டியில் 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய மொஹம்மெட் சிராஜ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தொடரின் நாயனாக தொடரில் மொத்தமாக 201 ஓட்டங்களைப் பெற்ற டீன் எல்கர் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.