காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் (இ. த .க) பொதுசெயலாளராக செயல்பட்டுவரும் குகதாசனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிப்பதற்கு பல அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரா. சம்பந்தன் உயிரிழந்து ஒருனால் முடிவதற்குள் பதவிக்கு போட்டி போடுகின்ற நிலமை தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்வதற்கான காலம் போதுமானதாக இருந்த போதிலும் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகிப்பது அரசியல் கலாசாரத்திற்கு பொருத்தமற்றது என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.
தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக செயற்படும் குகதாசனின் மக்கள் சேவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சண்முகம் குகதாசன் இலங்கை தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டமை குறித்து பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.
அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.