போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த பருவத்தின் அல் நாசரின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார், இதன் மூலம் இந்த பருவத்தில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இது சவுதி லீக்கில் ஒரு வீரரின் அதிகபட்ச கோல்கள் ஆகும். ரொனால்டோவின் கோல்களின் உதவியுடன் அல் இட்டிஹாட் அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் கணக்கில் அவரது அணியான அல் நாசர் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
2018-19 பருவத்தில் முன்னாள் அல் நாசர் வீரர் அப்டெர்ரசாக் ஹம்தல்லா, சவூதி புரோ லீக் சீசனில் அதிக கோல்கள் அடித்த சாதனை தன்வசம் வைத்திருந்தார். அவர் 34 கோல்களை அடித்திருந்தார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் லீக்கில் இணைந்த பிறகு அல் நாசரில் ரொனால்டோவின் முதல் முழு சீசன் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ரொனால்டோவின் தனிப்பட்ட திறமை இருந்தபோதிலும், அல் நாசர் அணிக்கு இந்த பருவம் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
அந்த அணி கோப்பையை வெல்லத் தவறியது மட்டுமல்லாமல், அல்-ஹிலால் அணிக்கு (34 ஆட்டங்களில் 96 புள்ளிகள்) அடுத்தபடியான 82 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.