க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி ஒருரை கடத்திச் செல்ல முயற்சிப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் என்பதுடன் அவர் இந்த மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சகோதரர் இராணுவ சிப்பாயாகக் கடமையாற்றுபவர் என்பதுடன் சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் சிறுமியின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ளதாகவும் இதன்போது இவர்கள் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் ஏற்கனமே திருமணம் முடித்தவர் எனச் சிறுமிக்குத் தெரியவந்ததையடுத்து சிறுமி அவரைத் தவிரித்து வந்துள்ள நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியைக் குலுகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் தனது நண்பர்களுடன் இணைந்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமியைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளதாகவும் இதனையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.