Tamil News Channel

சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கான தீர்மானம் குறித்து விளக்கம்..!

cigarat-tax-

1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோது நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த விளக்கத்தை முன்வைத்தனர்.

சரியான தகவல்கள் இன்றி சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியைக் கூட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டுமாயின் அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க நிதி பற்றிய குழு இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தது.

அத்துடன், சிகரெட்டுக்களின் மீதான உற்பத்தி வரி தொடர்பில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளுக்கு அமைய, வரி அதிகரிப்பு முறையின் ஊடாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்காது என்றும், நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானமே அதிகரிக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

எனவே, இந்த வரி மறுசீரமைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தளவு நன்மை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும், இது பற்றி நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து நியாயப்படுத்தல்களைப் பெற்று குறித்த வரி அதிகரிப்பை மறுபரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வெளியிடப்பட்ட 2417/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வியாபாரப் பண்ட அறவீட்டின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளைப் பெற்று, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 63 பொருட்களுக்கு அதே விகிதத்தில் இந்த வரி விதிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வெளியிடப்பட்ட 2421/03 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அமைய றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் பேரீச்சம் பழங்களுக்கு வரிச் சலுகை கோரப்பட்டுள்ளது.

அத்துடன், வருமான வரிகளில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் 28(6) பிரிவைத் திருத்துவதற்கான நெறிமுறை பற்றியும் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது. இதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts