கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் உள்ள பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மேலதிக விசாரணைக்காக நவம்பர் 11ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.

தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதி ஷிரான் பாசிக், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, அரச சட்டத்தரணி பிரதிவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளிடம் வழங்கியுள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலான் ரத்நாயக்க, சமிந்த அத்துகோரல மற்றும் வசந்த பிட்டிகல ஆகிய சட்டத்தரணிகள், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அடுத்த திகதி நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தொகை தற்போது அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய நீதிபதி, குறித்த வழக்குப் பொருட்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தாலும், தற்போது மேல் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறை இடிந்து விழுந்துள்ளதால், இது தொடர்பில் தற்போது உத்தரவு பிறப்பிக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.

அதன் பின்னர் இந்த வழக்கை பூர்வாங்க விசாரணைக்காக நவம்பர் 11ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here