திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான நிகழ்வு திருகோணமலையில் அமைந்துள்ள JKAB Beach Resort இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை சிறுவர் நிதியம், சிறுவர் அபிவிருத்தி நிதியம், அக்சன் யுனிட் லங்கா மற்றும் AYEVAC இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.
“வினைத்திறனான சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
AYEVAC பற்றிய அறிமுகம், சிறுவர் பாதுகாப்பு சேவை ஆய்வின் முன்வைப்புக்கள், ஆய்வின் முன்வைப்புக்களின் பரிந்துரைகளை ஆராய்தல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில், சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் அதிகாரிகளிடம் பண்புசார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு சேவை வழங்குவதில் தற்போது உள்ள முக்கியமான இடைவெளிகளை கண்டறிதல்.
மேலும் முறையான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தலும் பரிந்துரைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தலும், சிறுவர் பாதுகாப்புசார் சேவைகளை வழங்கும் அதிகாரிகளுக்கு இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிறுவர் சேவை அதிகாரிகள், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர்கள், அக்சன் யுனிட் லங்கா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.