சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

0
4

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு முன்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி வழியாகவே உறவினர்களை தொடர்புகொண்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் 28ஆம் தேதி, கோவிலில் பாதுகாவலராக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, காவலர்களால் அடிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் காவல்துறையின் மீறல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தமிழ்நாட்டு மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள சிக்கல்களை ஆராய, விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்படும் வகையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், திமுக ஆட்சியின் கீழ் நிகழ்ந்த அனைத்து போலீசார் மிருகத்தனங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோரியுள்ளது.

ஜூலை 6ஆம் தேதி சென்னை நகரில் மெகா ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அஜித் குமாருக்கு நீதி கோரப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம்  அறிவித்துள்ளது. இதில் விஜய் நேரில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்த மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழக்கை சிபிஐ (CBI) க்கு மாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, காவல்துறை மீது கடுமையான கண்டனம் தெரிவித்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித்தின் உடலில் 44 காயங்கள், மற்றும் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய்ப் பொடி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருப்புவனம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், அதிகாரபூர்வமாக வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here