நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழை காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவற்றுள், 6 மரணங்கள் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ளன.
18 மாவட்டங்களின் 171 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,610 குடும்பங்களைச் சேர்ந்த 43,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் நேற்று (24) பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது.
அங்கு, தற்போது மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலை காரணமாக, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும், 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட நிவாரண சேவை நிலையங்கள் விசேடமாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களில் பல பிரதேசங்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.