சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் , போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது, கவிதரன், மிதுசன், எலிஸ்ராஜ், அபிசேக் மற்றும் நிவாசன் ஆகிய மாணவர்களே இவ்வாறு கைது செய்பட்டுள்ளனர்
அத்தோடு குறித்த பகுதியில் நிலவிய பதற்ற சூழலினால் A9 வீதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியினை தொடர்ந்து 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பிலும் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தை சுற்றி போராட்டக்காரர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களும் இணைந்து இப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், பேரணியை தடுத்து நிறுத்த பிரதான வீதியில் வீதித்தடைகளையும் ஏற்படுத்தி நீர்தாரைப்பிரயோக வாகனங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது