போர் தாக்குதலால் சிதைந்துள்ள வடகிழக்கு சூடானில் உள்ள பாரம்பரிய தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பகுதி இடிவில் 11 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக, அரசாங்கத்துக்கு சொந்தமான சூடானிய கனிம வள நிறுவனம் (SMRC) அறிவித்துள்ளது.

இந்த விபத்தானது, செங்கடல் (Red Sea) மாகாணத்தில் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள அட்பாரா மற்றும் ஹையா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள தூரக்காடான
ஹோவைட் (Howeid) பகுதியில் உள்ள கிர்ஷ் அல்-ஃபில் (Kirsh al-Fil) எனும் சுரங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழலுக்கும் உயிருக்கும் அபாயம் ஏற்படுகின்றதென முன்னதாகவே எச்சரிக்கப்பட்ட இந்த சுரங்கத்தில், நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதும், சட்டவிரோதமான சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடந்ததாக சூடானிய கனிம வள நிறுவனம் தெரிவிக்கின்றது.
2023 ஏப்ரலில் தொடங்கிய சூடான் உள்நாட்டுப் போர் மூன்றாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், இராணுவம் மற்றும் அதற்கெதிரான விரைவு ஆதரவு படைகள் (Rapid Support Forces) ஆகிய இரு தரப்பும் தங்கத்தையே தங்கள் போர்முடிவுகளுக்கான முக்கிய வருமானமாக்கியுள்ளன.
போரை முன்னெடுக்க இருதரப்பும் தங்கத்தை பயனாக்கி வருவதால், சூடானின் தங்கத் தொழில் இப்போது பல்வேறு சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.
பெரும்பாலான தங்கம், சட்டவிரோதமாக சாட், தெற்கு சூடான் மற்றும் எகிப்து வழியாக கடத்தப்பட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைகின்றது.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடான சூடான், தங்க உற்பத்தியில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அவை பெரும்பாலும் பாரம்பரிய சுரங்கங்களில் மட்டுமே நடக்கின்றன.
பாதுகாப்பு உபகரணங்களும், தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத இந்த சுரங்கங்கள், உயிர் இழப்புகளுக்கும் நோய்வியாதிகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.
போருக்கிடையில், 25 மில்லியன் மக்களை கடும் உணவுத்தட்டுப்பாட்டில் தள்ளிய சூடானில், தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் இல்லங்களை இழந்து அகதிகளாகியுள்ளனர். மேலும் 4 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் — இது உலகின் மிகப்பெரிய அகதிக் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.
இலங்கையிலும் காலம் காலமாக பாரம்பரிய சுரங்கங்கள் மற்றும் வளங்கள் சார்ந்த சுரண்டல்கள், சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வரலாறு உள்ளது.
சூடானில் நிகழும் இந்தச் சம்பவம், வளங்கள் சுரண்டப்படும் போது மக்கள் வாழ்வாதாரமும், உயிரும் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கான ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டாக இருக்கிறது.



