ஏமனின் ஹவுதி குழுவினரால் செங்கடல் பகுதியில் லைபீரியக் கொடி ஏந்திய கிரேக்கத்தின் எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல் திங்கட்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்குள்ளாகி, கப்பல் இயக்க சக்தியை இழந்ததாகவும், தாக்குதல் மறுநாளும் தொடர்ந்ததாகவும், இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பலாக இருந்ததனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், சில குழுவினரை “பாதுகாப்பான இடத்திற்கு” கொண்டு சென்றதாகவும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க தூதரகம் “பல உயிர் பிழைத்தவர்களை கடத்தியுள்ளனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதே மாதத்தில், மற்றொரு கிரேக்கத்திற்கு சொந்தமான லைபீரியக் கொடி ஏந்திய கப்பலையும் ஹவூதிகள் தாக்கியிருந்தனர், ஆயினும், கப்பலில் இருந்த 22 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
2023 நவம்பர் முதல் இப்போது வரை ஹவுதிகள் சுமார் 70 வணிகக் கப்பல்களை தாக்கி இருக்கின்றனர். இதில் 4 கப்பல்கள் நீர்மூழ்கடிக்கப்பட்டதாகவும், 5 வது கப்பல் கைப்பற்றப்பட்டு, 7 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான தாக்குதல்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமைக்கு மேலும் பல நாட்டுப் பிரஜைகள் ஆட்பட்டுவருவதால், எரிவாயு மற்றும் சரக்கு போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு மேலதிகப்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.



