யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே, கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, அந்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக செயல்படும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதவானின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையில், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 47 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 44 என்புக்கூடுகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன.
சிறார்களின் என்புகளும் அடங்கிய இந்த எச்சங்கள், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய சான்றுகளாக மாறியுள்ளன.
இந்நிலையில், இன்றைய தினமும் அகழ்வுப் பணிகள் தொடரும் எனவும் மேலும் பல மனித எச்சங்கள் கிடைக்கப்பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



