சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உகாண்டா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர், லோயர் ஷபெல்லில் உள்ள பேல்டோகிள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது.

புதன்கிழமை (நேற்று) காலை 7.30 மணியளவில் (இலங்கை நேரப்படி மாலை சுமார் 11.00) இந்த விபத்து நடைபெற்றது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 8 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததால், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, அருகிலிருந்த மூன்று பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என உகாண்டா இராணுவ செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் குலாய்கியே தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒருவர், “மிகப் பெரிய சத்தத்துடன் வெடிப்பு மற்றும் புகை எழுந்தது,” என கூறியுள்ளார். மேலும், விமான நிலையத்தில் பணிபுரியும் உமர் ஃபரா என்பவர், “ஹெலிகாப்டர் சுழன்று விழுந்தது” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

விபத்தின் பின்னர் விமான நிலையத்தில் சிறிய தாமதங்கள் ஏற்பட்டன என்றாலும், சோமாலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் அகமது மகாலின் ஹாசன், “நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. ஓடுபாதை செயல்பாட்டில் உள்ளது. விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.

சோமாலியாவில் அமைதி காக்கும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு மற்றும் நிலைப்படுத்தல் பணி (AUSSOM) கீழ் உகாண்டா, கென்யா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அல்-ஷபாப் எனப்படும் தீவிரவாத அமைப்பை எதிர்க்கும் இந்த அமைதி படைகள், சோமாலிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் மத்திய ஷபெல்லே பகுதியில் இடம்பெற்ற ஒரு நடவடிக்கையின் போது, அல்-ஷபாப் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் சோமாலிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here