ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பாதீடாக ஒருசிலர் அடையாளப்படுத்தினாலும் அது நாட்டுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பாதீடாக அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (18) இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த இலக்கை பார்த்தால் இம்முறை அதிக நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். 05 ரில்லியன் ரூபா வருமான இலக்கு மற்றும் 2.3 சதவீத முதன்மை எல்லையை எதிர்பார்த்தாலும் எனது எதிர்பார்ப்புக்கமைய அந்தளவுக்கும் அப்பால் சென்ற செயற்பாடாகும்.
அதேபோன்று அரச பத்திரங்களுக்காக குறுகிய காலத்தில் உருவாகும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியமாகும். அதேபோன்று எமது நிதிக் கொள்கைக்கமைய நிலையான வட்டி சதவீதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஸ்தரித்தன்மையை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் அளவுருக்களுக்கு ஏற்பட செயற்படுதல் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன் இது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும் வரவுசெலவுத் திட்டமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.