இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனும் சீனாவின் EXIM வங்கியுடனும் நேற்று (26.06) கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று இரவு (26.06) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என முத்திரை குத்தப்பட்டிருந்த இலங்கையுடன் சர்வதேச நாடுகள் கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திக்கொண்டதாகவும் இதற்கிடையில் இரு தரப்பு கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பிற்கு இணக்கம் தெரிவித்தமை சர்வதேசத்திடமிருந்து கிடைத்த ஒரு அங்கீகாரம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது அந்நிலையில் இருந்து மீண்டுள்ளதுடன் இந்த பயணத்தை தொடர்ந்தால், 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாற முடியும் என்பது உறுதி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு காலாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வௌிநாட்டு கையிருப்பு 5500 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. ரூபா வலுவடைந்துள்ளதுடன், வங்கி வட்டி வீதம் குறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கமைய கிடைக்கப்பெற்ற சாதக நிலையை பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை ஏற்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இரு தரப்பு வௌிநாட்டுக் கடன் மறுசீரமைக்கப்பட்டதால் கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை 2027 ஆம் ஆண்டு வரையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறையாற்றியுள்ளமை குறிப்பித்தக்கது.