Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பொசொன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு ,

பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த செழுமையான நிகழ்வு நமது நாட்டில், கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்தியது. புத்த தர்மம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்க்கை சூழலுக்கு வழிகாட்டி, தர்மங்களால் மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கும் பொசொன் காரணமாக அமைந்தது.

இதேபோல், ஆட்சியாளரும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு அகிம்சையைத் தழுவுவதே இதன் அடையாளமாகும். பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது. குறிப்பாக, முழு உலகமும் ஒவ்வொரு நிலைமைகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், அகிம்சை என்பது தன்னுடையதும் பிறருடையதும் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாக அமையும்.

அது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடத்தையாகும். எனவே, பொசொன் பௌர்ணமி தினத்தில் பொதிந்துள்ள அகிம்சையின் பெறுமதி இன்றளவில் அதிகமாக உணரப்படுகிறது.

மஹிந்த தேரர் இந்த நாட்டிற்கு வழங்கிய உன்னதமான பௌத்த தர்மத்தில், “ஒருவர் வளமானதை வளமானதாகவும் வளமற்றதை வளமற்றதாகவும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு அந்த எண்ணமும் ஒழுக்கமும் கொண்ட பொறுப்புள்ள மக்களே தேவைப்படுகின்றனர் என்பதையும் வலியுறுத்தினார். அந்த சமூகத்தை மீண்டும் இலங்கையில் கட்டியெழுப்பி, நாட்டுக்குத் தேவையான புதிய நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளுடன் கூடிய நவீன நாகரிகம் கொண்ட நாட்டை உருவாக்கும் கைவிடமுடியாத பொறுப்பு, எம் மீது சாட்டப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை நடைமுறை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றுபடுவோமென பொசொன் தினத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசொன் தினமாக அமையட்டும்.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *