கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை எட்டியதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையே பிரதிபலிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஜப்பானால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறை அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜப்பானில் மின்சார விநியோகத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத்துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.