அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய கட்டண விகிதங்களை விதிக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் குறித்த கடிதங்கள் இன்று (ஜூலை 4) முதல் முதற்கட்டமாக 10 நாடுகளுக்கு அனுப்பப்படும் எனவும், அவை 20% முதல் 30% வரை வரிகளைக் கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பன்முக வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர்த்து, நாட்டுக்கு நாடு அடிப்படையிலான வரிவிதிப்பு முறைக்கு மாற்றமாகும். “170-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தனித்தனியாக ஒப்பந்தங்கள் செய்வது சாத்தியமில்லாத விஷயம்” என டிரம்ப் கூறினார்.
கடந்த வாரம் வியட்நாமுடன் செய்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சில நாடுகளுடன் மட்டுமே விரிவான ஒப்பந்தங்கள் நடைபெறும் என்றும், பெரும்பாலான நாடுகளுக்கு நேரடி கட்டண விகிதங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



