இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 05 இல் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் – ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிரணி அரசியல் தரப்பினர் ஒன்றிணையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அனைத்து எதிர் அணியினரும் ஒரே மேடையில் இணையவுள்ளனர்.
அவர்கள் ஏற்கனவே ஒன்றிணைவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர் என்றும் திஸாநாயக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகள் இதில் ஒரு தடையாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை தடுக்கவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் அவர்கள் ஒன்றுபடுவார்கள் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த திஸாநாயக்க, இந்த தாக்குதல்களை முன்னெடுத்தவர்களும், தாக்குதல்களை தடுக்க வேண்டியவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களா என்பது கேள்விக்குறியே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இருந்தால், அது ஒரு சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். தனியார் ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிக்காததால் ஜெமீல் தெஹிவளைக்கு சென்றார்.
இதனையடுத்து, அவர் இரண்டாவது தடவையாக வெடிகுண்டை வெடிக்கச்செய்யும் முன்னர் உளவுத்துறை அதிகாரிகள் சரியான நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றது எவ்வாறு? இது எப்படி சாத்தியம்? என்று அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.
மாத்தளை பகுதியில் பொடி சஹ்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ‘பொடி சஹ்ரான்’ வற்புறுத்தப்பட்டுள்ளார்.
இதை செய்தது யார் என்றும் அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், சாரா (ஜாஸ்மின்) இறந்துவிட்டாரா அல்லது அவரை காணவில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரங்கள் தீர்க்கப்படும் வரை நாடு ஸ்திரத்தன்மையற்றதாகவே தொடரும் என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.