Tamil News Channel

ஜப்பானின் பாராட்டை பெற்ற இலங்கை..!

a2

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதிலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா பாராட்டியுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த திங்கட்கிழமை (1) ஜப்பான் சென்றுள்ளார்.

அதன்படி ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான இருதரப்பு சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை (02) டோக்கியோவில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதிலும் இலங்கையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், மனிதவளப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் உப தலைமை நாடு என்ற ரீதியில் இருதரப்பு கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்கு ஜப்பானால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய நிதியுதவியின் கீழான செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும், இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை சிரேஷ்ட அமைச்சரவை செயலாளர் ஹயாஷி யொஷிமஸாவுடனான சந்திப்பொன்றும் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன், இதன்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் நட்புறவு குறித்தும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts