ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை (24) இரவு நடைபெற்ற கொன்டினென்டல் டுவர் ப்றொன்ஸ் அன்ஹால்ட் 2024 மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் யுப்புன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்தே அவர் முதலாம் இடத்தைப் பெற்றார்.
நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியை யுப்புன் அபேகோன் 10.15 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தார்.
ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கு உலக மெய்வல்லுநர்களுக்கு வேர்ல்ட் அத்லெட்டிக்ஸினால் (சர்வதேச மெய்வல்லுநர் சங்கம்) ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் திகதிக்குள் நடைபெறவுள்ள சர்வதேச 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் யுப்புன் சிறந்த நேரப் பெறுதிகளுடன் வெற்றி பெற்றால் தரவரிசை புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியை பெறுவதற்கு சொற்ப வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.