அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரி குறைப்பு திட்டத்துக்கு பின்னர், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ’Medicaid’ எனப்படும் மருத்துவ நிதியை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்த புதிய திட்டம், மலிவு மருத்துவ பராமரிப்பு சட்டத்துக்கு (Affordable Care Act) எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது சமூக ஊடகமான X (முந்தைய Twitter) பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், இந்த யோசனை நிறைவேற்றப்படுமானால், மொத்தம் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவப் பாதுகாப்பை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், இது மக்கள், குறிப்பாக உழைக்கும் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் நலவாழ்வை மிக தீவிரமாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், இந்த சட்டத்தை விரைவில் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஒபாமா தனது செய்தியில், “இந்த திட்டத்திற்கு எதிராக உடனடியாக உங்கள் பகுதிக்கான பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டு, எதிர்ப்பு தெரிவியுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.



