எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிடுவதற்கு தமிழ் உறவுகள் பலர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், தாம் எதிர்பாராதவகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்தவர்களும் அவர்களது நாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அக்கட்சியின் கொழும்புக்கிளை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான இறுதித்திகதி சனிக்கிழமையுடன் (07) முடிவுக்குவந்த நிலையில், இதுகுறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது.
மிகக்குறுகிய கால அவகாசத்தினுள் நாம் எதிர்பாராத விதத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் கொழும்பில் களமிறங்குவதற்கு அநேக தமிழ் உறவுகள் தமது விருப்பத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பலரும், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்தவர்களும் எமது கட்சியில் சார்பில் போட்டியிடுவதற்கான நாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது நாம் எதிர்பார்க்காத விடயமாகும்.
அத்தோடு எமது கட்சியுடன் இணைந்து கூட்டாகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை சில பதிவுசெய்யப்பட்ட தமிழர் மற்றும் தமிழரல்லாத கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வெளிப்படுத்தியுள்ளன.
கொழும்புவாழ் மக்களின், அதிலும் குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்கும், தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு தெற்கில் ஒரு களத்தைத் திறப்பதற்குமாகத் தம்மை அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் அனைவருக்கும் நாம் நன்றி கூறுகிறோம். அதேவேளை தேர்தல் தொடர்பான சகல தரப்புக்களினதும் கருத்துக்களை ஆராய்வதற்கென கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் (09) வவுனியாவில் கூடவிருக்கிறது.
இதன்போது கொழும்பு மாநகரசபைத்தேர்தலுடன் தொடர்புடைய களநிலைவரம் மற்றும் சாதக, பாதக அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.