லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமை புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Sequoia Consultants மாறியுள்ளது.
மேலும் எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ளை சிக்சர்ஸ் எனும் புதிய பெயருடன் களமிறங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Sequoia Consultants நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள், அதன் தலைமைச் செயல் அதிகாரியான கட்டட பொறியாளரான பிரியங்கா டி சில்வாவுக்கு சொந்தமானது.
முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரரான டி சில்வா, 1983ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார், தற்போது அமெரிக்காவின் 60 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
முன்னதாக தம்புள்ளை தண்டர்ஸ் கிரிக்கட் அணியின் உரிமையாளராக செயற்பட்டுவந்த பிரித்தானிய பிரஜை தமீம் ரஹ்மான் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளராக செயற்பட்ட இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் அனைத்து உரிமைகளும் உடனடியாக அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையிலேயே, தம்புள்ளை அணியின் உரிமம் புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.