தனது தாய் நோய்வாய்ப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதிகான் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தனது தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரரான ஃபில் சால்ட் நாடு திரும்பியதன் காரணமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் அணிக்கு அவசரமாக அழைக்கப்பட்டார்.
ரஹ்மானுல்லா குர்பாஸின் தாய் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக சிரமத்துக்கு மத்தியில், அவர் அணியில் இணைந்துகொள்ளப்பட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தினமும் என் அம்மாவுடன் பேசுகின்றேன். கொல்கத்தா அணியும் எனது குடும்பம் போன்றது. தற்போது இரண்டு குடும்பங்களையும் நிர்வகிப்பது கடினமாகனது.
“ஒரு கிரிக்கெட் வீரராக, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும், ஒரு கிரிக்கெட் வீரராக, நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் நான்கு (வெளிநாட்டு) வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.
அதனால் நீங்கள் எப்போதும் சரியான மனநிலையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால், நீங்கள் நன்கு தயாராக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,” எனவும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதிகான் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.