தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆரோக்கியத்தின் மீதுள்ள அக்கறை ஏதாவது நோய் வரும் வரை தான் இருக்கும். அதிலும் பலர் காலையில் வேளையில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள், பானங்கள் மாத்திரம் உணவாக எடுத்து கொள்கிறார்கள்.
இவ்வாறு எடுத்து கொள்வது கோடைக்காலங்களுக்கு சரியாக இருந்தாலும், தற்போது குளிர்காலம் என்பதால் உடலுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தி தேவைப்படுகின்றது.
இப்படியான நேரங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களில் ஒன்றான நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. ஏனெனின் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
அத்துடன் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியவற்றுடன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களும் நெல்லிக்காயில் உள்ளது. இது உடலுறுப்புக்களின் செயற்பாட்டை அதிகரிக்கிறது.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வெல்லத்துடன் சேர்த்து நெல்லிக்காய் சாப்பிடும் பொழுது பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின் நெல்லிகாயுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் + வெல்லம் சாப்பிட்டால் என்ன பலன்?
1. நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அத்துடன் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு சேர்கிறது. இதனால் நகம் வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது.
2. நெல்லிக்காயை வெல்லத்துடன் சேர்த்து உட்கொள்பவர்களுக்கு இரும்பு சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கும். இதனால் அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படமாட்டார்கள்.
3. செரிமான மண்டலத்தில் கோளாறு உள்ளவர்கள் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம். ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கும். எனவே செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடனடி நிவாரணம் பெற வேண்டும் என்றால் நெல்லிகாயுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
4. தினமும் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் சருமத்தில் சில மாற்றங்களை பார்க்கலாம். அதாவது, நெல்லிக்காயில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது சருமத்திற்கு வரும் சேதத்தை தடுத்து நீரேற்றமாக வைத்து கொள்ளும்.
5. தவறான உணவு பழக்கங்கள் காரணமாக தற்போது பலர் அதிக எடையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படியானவர்கள் வெறும் வயிற்றில் நெல்லிக்காய், வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். ஏனெனின் இவை இரண்டும் உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடலில் இருந்து அதிகப்படியான கலோரிகளும் கரையச் செய்கிறது. இதனால் உங்களின் எடை சீக்கிரமாக குறையலாம்.