Tamil News Channel

திருகோணமலைக்கு அருகே தாழமுக்கம், சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை…

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக திருகோணமலையிலிருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சக்திமிக்க தாழ்அமுக்கமாக மாற்றமடைவதுடன் நாளையளவில் மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த சூறாவளியானது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையினூடாக எதிர்வரும் 5 ஆம் திகதியளவில் இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையினால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே இக் கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்பாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts