இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் (05.07) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவரே தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (07.07) இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.