December 13, 2025
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ திட்டம்!
புதிய செய்திகள்

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ திட்டம்!

Jan 23, 2025

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சீனாவின் சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற வசதியை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, உலகின் முன்னணி பெட்ரோலிய மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக்குடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பில் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , இது முதன்மையாக ஏற்றுமதி சந்தைக்கான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டமாக இருக்கும் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே முன்மொழியப்பட்ட பல்துறை பெட்ரோலிய குழாய் இணைப்பு பற்றி குறிப்பிடுகையில், இரு தரப்பினரும் அத்தகைய திட்டத்தைப் பற்றி பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.

இருப்பினும், கிழக்கு இலங்கையில் திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மேலும் அத்தகைய ஒத்துழைப்புக்கு இந்தியா தயாராக இருந்தால் அதைச் செய்யும் என்றும் அவர் கூறினார். கூட்டு அறிக்கையின்படி, இந்த திட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் கடந்த மாதம் புது டில்லி விஜயத்திற்கு பிறகு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில், திருகோணமலை எண்ணெய் குதங்களை பிராந்திய எரிசக்தி மற்றும் தொழில்துறை மையமாக மேம்படுத்துவது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *