அமைச்சரவையானது உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தின் கீழ் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கொள்வனவுக் கட்டணத்தைத் திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழும் குறித்த சட்டத்தில் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய, 10 மெகாவாற்று அல்லது அதற்குக் குறைவான கொள்ளளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்களுக்குரிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, உத்தரவாதமளிக்கப்பட்ட சந்தை விலையை விடவும் உயர்ந்த விலைக் கட்டண முறையின் கீழ் உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கமைய, மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கொள்வனவின் போது மாறுபடுகின்ற கட்டண முறையை நடைமுறைப்படுத்துவதற்காக (2023.03.13)அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், அபிவிருத்தியாளர்கள் ஒரு சிலர் மாத்திரம் அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அதனால், மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கட்டணத்தைக் கணிப்பீடு செய்வதற்கு விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைக் கணிப்பீடு சமன்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கும், உத்தேசக் கட்டணத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.