மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் இனி அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான த்ரெட்ஸ் செயலியை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த ஜூலை 6ம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் செயலியானது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம்.இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம்.
இந்த செயலியில் எழுத்து வடிவிலான பதிவுகளே பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும்.இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல கோடி பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கினர்.
இந்நிலையில் திரெட்ஸ் செயலி தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் (Keyword search) அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம்.இது பயனர்களுக்கு விருப்பமான உரையாடல்களைக் கண்டறியவும், அதில் இணையவும் வழிவகுக்கும் என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.
மேலும் தேடல் அம்சத்தில் பல புதிய அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது குறித்த கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவர் தனது திரெட்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக கூறிய மெட்டா நிறுவனம், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்காமல் திரெட்ஸ் செயலியை நீக்கலாம் என சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.