தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல, மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதற்காக காவல்துறையினரைக் குழுக்களாகப் பிரித்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,
“பிரசன்ன ரணவீரவுடன் எங்களுக்கு ஏதோ ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நீங்கள் கூறவில்லையே. நாங்களும் அவரையும் தேடிக்கொண்டிருக்கிறோம். செவ்வந்தியையும் தேடுகின்றோம்.இன்னும் உங்களுக்குத் தெரியாத பலரையும் தேடுகின்றோம். காவல்துறையினரை அதற்காக ஈடுபடுத்தியுள்ளோம்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் வழக்கு தாக்கல் செய்வோம். அந்த 13 பேரில் காவல்துறை அதிகாரிகள் இருவரும், சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் இருக்கிறார்.
இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அரச இயந்திரத்திற்குள் உள்ள அதிகாரிகளைக் கூட கைது செய்யலாம். காவல்துறை தங்களால் முடிந்த அனைத்தையும் செயற்படுத்துகிறது. எனவே, தப்பிக்க வழி இல்லை. எங்களுக்குத் தெரியாத, காவல்துறைக்குத் தெரியாத உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், அவற்றை முன்வைப்பது நல்லது. சட்டம் நிச்சயமாகச் செயல்படுத்தப்படும் என்பதை உறுதியாக நம்பலாம்” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.