பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மத்திய நிலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த 60 விகாரைகள் வாக்களிப்பு நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில நேற்று (05) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் இடம்பெறும் தினத்தன்று பெளத்த கட்டின பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமையினால், அது தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுமென்று முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், பல்வேறு நிலைப்பாடுகளும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
அதற்கமைய ஒவ்வொரு பகுதிகளிலும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக சம்பந்தப்பட்ட விகாரைகளின் விகாராதிபதிகள் உள்ளிட்டோரின் விருப்பத்தைக் கேட்டறிந்திருந்தோம்.
2,263 விகாரைகளில் வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளன. அவற்றில் 2,203 விகாரைகளிலுள்ள விகாராதிபதிகள் அவர்களின் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.