உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் தற்போது அமுலிலுள்ள சட்டநடை முறைகளுக்கமையவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதே தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்கால தேர்தல் நடைமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவைத் தீர்மானம் எடுத்திருந்தாலும் அது இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதுடன் முடிந்தளவு விரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.