ஜனாதிபதி மாறினாலும் அரசாங்கம் மாறினாலும், சர்வதேச நாணய நிதியத்திடம் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் நிபந்தனைகளை மாற்றியமைக்கப் போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது.
ஆனால் இன்று அந்த ஆணை காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வரியைக் குறைப்போம், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் புதிய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் கையெழுத்திடுவோம் எனக் கூறி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டாலும், இறுதியில் மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே வீணாகிப் போயுள்ளது.
இந்த உடன்படிக்கையை மாற்றியமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளாது செயல்பட்டு வருகிறது.
ஜனாதிபதியும், அரசாங்கமும் மாறினாலும், பழைய முறைமையே தொடர்ந்து அமுலில் உள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பினால் வாழ்க்கைச் சுமை அதிகரித்துக் காணப்படுகிறது. இது தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதும், அவ்வாறானதொன்றை அரசாங்கம் செய்யவில்லை.
இவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்றே 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் ஆணையை வழங்கினர்.
தேர்தல் மேடைகளில் சொன்னதைச் செய்ய முடியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.