தொடருந்துத் திணைக்களத்தின் முக்கியப் பதவிகளுக்கு பெண்கள் ஆட்சேர்ப்பு!
165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை தொடருந்துத் திணைக்களத்தில், முக்கிய பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி,
தொடருந்து இயந்திர சாரதிகள்,
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள்,
நிலையப் பொறுப்பதிகாரிகள், மற்றும்
தொடருந்து மேற்பார்வை முகாமையாளர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
தொடருந்துத் திணைக்களம் தொடங்கியதிலிருந்து, மேற்பார்வை முகாமையாளர் பதவியைத் தவிர, (அந்தப் பதவியில் 2012 மற்றும் 2015 ஆண்டுகளில் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது) மற்ற அனைத்து பதவிகளும் இதுவரை ஆண்களுக்கே வழங்கப்பட்டிருந்தன.
அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய, அரசுத் துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, அரசியலமைப்பின் 55வது உறுப்புரையின் (1) உப பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()