நேற்றைய தினம்(15) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெற்றிருந்தது.
பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 48.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும் அஷ்மதுல்லா ஒமர்ஷை 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் ப்ரமோத் மதுஷன் 3 விக்கட்டுக்களையும், அசித பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் அதிகபட்சமாக இலங்கை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 35.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பத்தும் நிசங்க 118 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு கைஸ் அஹ்மட் 2 விக்கட்டுக்களையும் முஹம்மட் நபி 1 விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இலங்கை வீரர் பத்தும் நிசங்க தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.