இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T 20 தொடரின் இரண்டாவதும் போட்டி நேற்றைய தினம்(19) நடைபெற்றிருந்தது.
ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் மொஹமத் நபி மற்றும் அஷ்மதுல்லா ஒமர்ஷை ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை ஆப்கானிஸ்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கரிம் ஜனட் 28 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ், பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளையதினம் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.