தொழிலாளர் உயிர்களை பறித்த உலை வெடிப்பு: தெலுங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

0
3

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே அமைந்துள்ள பாஷமைலாரம் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனமான சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் குறைந்தது 36 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெடிப்பு, ஆலையின் உலைப்பகுதியில் ஏற்பட்டதென கூறப்படுகின்றது. மேலும், வெடிப்புக்குப் பின்னர் உலை இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள் அதன் கீழ் சிக்கிக் கொண்டனர் என தெரிய வந்துள்ளது.

இன்று (ஜூலை 1) மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்திய தெலுங்கானா மாநில முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். அவருடன் பல உயர் நிலை அமைச்சர்களும் (சுகாதார அமைச்சர், தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள்) இணைந்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்திய மதிப்பில் ₹1 கோடி இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். உடனடி நிவாரணமாக, தலா ₹1 லட்சம் மற்றும் ₹50,000 வழங்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் உஸ்மானியா அரசு மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் குழுவும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், DNA மாதிரிகள் மூலம் உடல்களின் அடையாளம் காண்பது மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை 15 உடல்களின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4 பேரின் உடல்தான் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும், வெடிப்பு மிக முக்கிய உற்பத்தி கட்டமைப்பை பாதித்துள்ளதுடன், ஆலையின் மருந்து உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here