இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் மூன்று T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் , தற்போது குறித்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி T20 போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 , 27, 29 ஆம் திகதிகளில் பல்லேகலை மைதானத்திலும், ஒருநாள் போட்டிகள் ஓகஸ்ட் 01ஆம், 04ஆம், 07ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது T20 போட்டிகள் ஜூலை 27, 28, 30 ஆம் திகதிகளில் பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுமென மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஒகஸ்ட் 02 ஆம் திகதியும் மீதமுள்ள போட்டிகள் முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு ஓகஸ்ட் 04ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் வனிந்து ஹசரங்கவின் இராஜினாமாவினால் வெற்றிடமாக உள்ள இலங்கை T20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவிக்கு உப தலைவர் சரித் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கை T20 கிரிக்கெட் அணியின் தலைவர் யார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இந்த வாரம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
T20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வர உள்ளது. இந்தியாவுடனான T20 தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் T20 தலைவர் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் சிக்கல் இலங்கை தேர்வுக்குழு முன் உள்ளது.
27 வயதான சரித் அசலங்க பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் இலங்கையின் T20 அணிக்கு தலைவராக இருந்துள்ளார், அங்கு அவர்கள் ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். மேலும், 2016ஆம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டார்.
இலங்கை T20 அணிக்கு முன்னாள் தலைவர்களான தசுன் ஷானக மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலைமை தாங்கலாமென ஊகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.