November 17, 2025
நடைமுறைக்கு வரும் புதிய வரி
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

நடைமுறைக்கு வரும் புதிய வரி

Jun 17, 2024

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த ஆண்டு புதிதாக எவ்வித வரிகளும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரக பகுதியில் நேற்று (16.06.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிகள் மாற்றியமைக்கப்படமாட்டாது என்பதுடன் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிதாக வரிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள வரிகள் 2027 ஆம் ஆண்டு வரை செயற்பாட்டில் இருக்கும் என்பதுடன் அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய சகல அரசாங்கங்களும் செயற்பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நிதி முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப திருத்தம் செய்த சகல அரசாங்கங்களும் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை எமது ஆட்சியில் மறுசீரமைப்போம் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது மேடை பேச்சுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என்பதுடன் நடைமுறைக்கு அது சாத்தியமாகாது. பெட்டிக்கடையை நிர்வகித்தவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது.

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் வெகுநாட்களுக்கு ஆட்சியில் இருக்காது.

எவர் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் தான் நாட்டை நிர்வகிக்க வேண்டும்.இதுவே யதார்த்தம்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கவை. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கும் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன். பொருளாதார விவகாரத்தில் நாட்டு மக்களிடம் இனியும் பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது.

போலியான அரசியல் வாக்குறுதிகளினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியும்.அரசாங்கம் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கைகளை மாற்றியமைக்கும் நிலை மாற்றமடைய வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எவ்வாறான நிலைப்பாட்டில் செயற்படுகிறது என்பதை நான் அறியவில்லை.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்கவை சிறந்த தீர்வாக தெரிவு செய்ய முடியும் என்றால் ஏன் அந்த தீர்மானத்தை இந்த ஆண்டும் எடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டம் பொதுஜன பெரமுனவிடம் இருந்தால் தாராளமாக முன்வைக்கலாம்” எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *