நாட்டில் உள்ள முதியோருக்காக, தேசிய கொள்கையொன்று கட்டாயம் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முதியோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில், நாடளாவிய ரீதியில் உள்ள 14,000 சிரேஷ்ட பிரஜைகளின் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், எமது நாட்டுக்கு உயிரோட்டத்தையும், சக்தியையும் வழங்குகின்ற சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்காக பாரிய சேவையை ஆற்றியுள்ளனர். சிலருக்கு இவர்கள் சுமையாக இருந்தாலும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவர்கள் பெருமதியான வளங்களாகும்.
இதேவேளை, முதியோரின் சேமிப்புக்காக 15 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. ஆனால் அதனை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்திருக்கிறது.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அதனை தாம், மீண்டும் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.