மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேர்த் திருவிழாவிற்கான விசேட பூஜைகள் நிறைவு பெற்ற பின் காலை 10.30 மணியளவில் அம்பாள் தேரேறி வீதி வலம் வருகை தந்தார்.
நேற்றையதினம் தேர்த் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக கட்டைக்காடு தீவுப் பிட்டி பகுதியில் இருந்து செதில் காவடிகள் பறவைக் காவடிகள் நேர்த்திக் கடனாக எடுத்து வரப்பட்டது.
தேர்த் திருவிழாவில் நானாட்டான் பிரதேசத்தில் பல கிராமங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
கடந்த 5ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் வசந்தோற்சவம் மஞ்சம் சப்பரம் என சிறப்புத் திருவிழாக்கள் நடை பெற்றது.
இன்றைய தினம் (19) தீர்த்தம் மற்றும் தீ மிதிப்பு திருவிழாவுடன் இந்த வருடத்திற்கான மகோற்சவ திருவிழா நிறைவு பெற உள்ளது.
இந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தையும் ஆலய பரிபாலனசபையினர் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.