ரஷ்ய – உக்ரெய்ன் போர் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரெய்ன் பிராந்தியங்களிலிருந்து படைகளை வெளியேற்றுதல் மற்றும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுதல் போன்றவற்றை உக்ரெய்ன் ஏற்றுக்கொண்டால் உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
“டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஷ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து உக்ரெய்ன் படையினர் வெளியேறுவதோடு, நேட்டோ கூட்டமைப்பில் இணையும் யோசனையையும் கைவிட வேண்டும்.
இது இரண்டையும் செய்தால் உக்ரெய்னுடன் நிரந்தரமாக போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடுவேன்.
இது மட்டுமின்றி அவர்களது ராணுவ வலிமையை கட்டுக்குள் வைத்திருப்பது, உக்ரெய்னில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களின் பாதுகாப்பை பேணுவது குறித்தும் உக்ரெய்ன் உறுதியளிக்க வேண்டும்.
ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையிலான ஒற்றுமையை மீட்டெடுக்க, இத்தகைய ஒப்பந்தம் அவசியம் என்று புடின் கூறியுள்ளார்“
ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பதைத் தடுப்பதே நேட்டோ அமைப்பு.
நேட்டோவுக்கு கடும் எதிர்ப்பான ரஷ்யா இந்த அமைப்பில் உக்ரெய்னும் இணைந்தால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கூறி வந்தது.
ஆனால், உக்ரெய்ன் ஜனாதிபதியான வொலோடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய விரும்பினார்.
இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்து, அந்த நாட்டில் ரஷ்ய மொழி பேசுபவர்களைக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா உள்ளிட்ட பிராந்தியங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், குறித்த நான்கு பிரதேசங்களிலும் உக்ரெய்ன் படையினரிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க உக்ரெய்னும் தொடர்ந்தும் போரிட்டு வருகின்றன.
இந்நிலையில் தனது போர் நிறுத்த நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார் விளாடிமிர் புடின்.